Monday, 2 December 2019

சபரிமலைக்கு செல்ல வாடகை புல்லட்; தெற்கு ரயில்வே அறிமுகம்

 ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக சபரிமலையின் பம்பைக்கு செல்ல 'புல்லட்' பைக்குகளை வாடகைக்கு வழங்கும் திட்டத்தை தெற்கு ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது.

சபரிமலையில் சீசன் துவங்கிவிட்டால், பேருந்து, ரயில்களில் கூட்டம் அலைமோதும். இதனால் சிரமத்திற்கு உள்ளாகும் பக்தர்களின் வசதிக்காக பம்பை வரையில் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் 'புல்லட்' பைக்குளை வாடகைக்கு வழங்கும் திட்டத்தை தெற்கு ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது. கொச்சியில் பைக்குகளை வாடகைக்கு விடும் நிறுவனத்துடன் இணைந்து இத்திட்டம் துவங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

முதல்கட்டமாக கடந்த நவ.,28ல் செங்கானூர் ரயில் நிலையத்தில் துவங்கப்பட்ட இத்திட்டம், திருவனந்தபுரம், எர்ணாகுளம், கோட்டயம், ஆலப்புழா, திருச்சூர் ரயில் நிலையங்களில் விரிவுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. வாடகையாக நாள் ஒன்றுக்கு (குறைந்தது 200கி.மீ.,) ரூ.1200 வசூலிக்கப்படுகிறது. குறிப்பிட்ட நேரத்திற்கு மேலாகும் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ரூ.100 வீதம் கூடுதலாக வசூலிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Sunday, 1 December 2019

கொடியேற்றத்துடன் தொடங்கிய தீபத் திருவிழா!’ - பக்தர்கள் வெள்ளத்தில் திருவண்ணாமலை

`
சிவ பெருமானின் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமான திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில், பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் வெகுவிமரிசையாக இன்று தொடங்கியது.

ஆண்டுதோறும், மிகப் பிரமாண்டமாக இந்த திருவிழா 10 நாள்கள் கொண்டாடப்படும். இந்த நாள்களில் பக்தர்களின் வெள்ளத்தில் திருவண்ணாமலை நகரமே அண்ணாமலையாரின் அருளால் பக்தி பரவசத்தில் மிதந்து கிடக்கும். தீபத் திருவிழாவை முன்னிட்டு, கொடியேற்றத்துக்கு முன்னதாக 3 நாள்கள் உற்சவம் நடைபெற்றது.

இந்த ஆண்டுக்கான தீபத் திருவிழாவையொட்டி நவம்பர் 28-ம் தேதி ஸ்ரீ துர்கையம்மன் உற்சவமும், 29-ம் தேதி ஸ்ரீ பிடாரியம்மன் உற்சவமும், 30-ம் தேதி ஸ்ரீவிநாயகர் உற்சவமும் நடைபெற்றன.

விழாவின் முக்கிய நிகழ்வாக டிசம்பர் 6-ம் தேதி இரவு வெள்ளித் தேரோட்டமும், 7-ம் தேதி காலை 7.05 மணிக்கு மேல் 8.05 மணிக்குள் பஞ்ச மூர்த்திகளின் மகா தேரோட்டமும் நடக்கிறது.

விழாவின் மிக முக்கிய நிகழ்வான பரணி தீபம் டிசம்பர் 10-ம் தேதி அதிகாலை 4 மணிக்குக் கோயில் மூலவர் சன்னிதியில் ஏற்றப்படுகிறது. அன்றைய தினம் மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர அண்ணாமலை மீது மகா தீபம் ஏற்றும் வைபவம் நடைபெறுகிறது.

இந்த ஆண்டு தொடங்கியுள்ள கார்த்திகை தீபத் திருவிழாவில், உலகம் முழுவதிலிருந்தும் சுமார் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விழா ஏற்பாடுகள் சிறப்பாகச் செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகளை, மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் தீவரமாகச் செயல்படுத்தி வருகின்றனர்.

Saturday, 30 November 2019

வழுக்கையில் முடி வளர,நரைத்தமுடி கருமையாக டிப்ஸ்

கூந்தல் உதிர்வது சாதரண பிரச்சனை என்றாலும் அதிலும் அளவோடு இருந்தால்தான் நல்லது. அளவுக்கு அதிகமாக முடி உதிர்தல் உங்கள் உடலில் உண்டான பாதிப்பையே உணர்த்துகிறது.

முடி உதிர்வு பருவத்திற்கு தகுந்தாற்போல் மாறினாலும், சிலருக்கு எப்போதுமே உதிர்ந்து கொண்டிருக்கும். இன்னும் சிலருக்கு கொத்து கொத்தாய் உதிரும். அது நல்லதல்ல. அப்படியே விட்டுவிட்டால் சொட்டை விழுந்துவிடும்.

மரபு ரீதியாக மட்டுமின்றி சிலருக்கு சரியாக பராமரிக்காமல் போனாலும் சொட்டை விழுவதற்கான வாய்ப்புகள் அதிகம். அப்படி முடி சொட்டையானவர்கள் இங்கே சொல்லப்பட்டுள்ள குறிப்புகளை முயற்சிக்கலாம். எந்த பக்கவிளைவும் இல்லை. இவை சக்தி வாய்ந்த மூலிகைகள் என்பதால் நல்ல பலன்கள் தருகின்றன. அதோடு இங்கு சொல்லப்பட்டுள்ள அனைத்து மூலிகைகளும் சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் சொல்லப்பட்டுள்ளது.

ஊமத்தைங்காய் :பிஞ்சு ஊமத்தைங்காயை அரைத்து தலையில் தடவி 20 நிமிடம் கழித்து தலைக்கு குளியுங்கள். இப்படி செய்தால் சொட்டை விழுந்த இடத்திலும் முடி வளரும். வாரம் ஒரு நாள் கட்டாயம் செய்து பாருங்கள். தலையில் ஏற்படும் பொடுகு, அரிப்பு எல்லாம் மறைந்து முடி வளர ஆரம்பிக்கும்.

கருமையான முடி கிடைக்க :அவுரி இலை பொடி எல்லா நாட்டு மருந்து கடைகளிலும் தவிர்க்கப்படாத ஒன்று. இது நரைமுடியை கருப்பாக மாற்றுவதற்காக ஆயுர்வேத மருந்துகளில் பயன்படுத்தப்படுகிறது. அது கருமையாக மாற்றுவதோடு, முடியின் வளர்ச்சியையும் தூண்டும். அதனை எப்படி பயன்படுத்துவது என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

அவுரி இலை

மருதாணி இலை.

செய்முறை:அவுரி இலையுடன், மருதாணி இலையை சேர்த்து அரைத்து தலையில் தேய்த்துக் குளித்து வந்தால் செம்பட்டை முடி கருமையாக மாறும்.

நரை முடி மறைய :கரிசலாங்கண்ணி நரை முடியை கருமையாக மாற்றும் அற்புத மூலிகையாகும். அதனை பயன்படுதும் முறையில் பயன்படுத்தினால்தான் அதனுடைய முழுப் பலனும் கிடைக்கும்.

தேவையான பொருட்கள்:

எலுமிச்சை பழச்சாறு.

கரிசலாங்கண்ணிச்சாறு.

பால்.

நல்லெண்ணெய்.

செய்முறை:எலுமிச்சை பழச்சாறு, கரிசலாங்கண்ணிச்சாறு, பால் எல்லாகற்றையும் சமமாக அரைலிட்டர் அளவு எடுத்து ஒன்றரை லிட்டர் நல்லெண்ணெயில் கலந்து காய்ச்சி வடிகட்டி ஆறு மாதத்திற்குமேல் தலைமுடியில் தேய்த்து வந்தால் நரை முடி குறையும்.

பொடுகு குறைய :செம்பருத்திப் பூ கூந்தலை அற்புதமாக வளரச் செய்யும். செம்பருத்தி, துளசி, வெட்டிவேர் கலந்த எண்ணெய் கூந்தலை நீண்டு வளரச் செய்யும் . மேலும் பொடுகை முழுவதும் கட்டுப்படுத்தும்.

செம்பருத்தி பூ.

துளசி விதை.

வெட்டிவேர்.

தேங்காய் எண்ணெய்.

செய்முறை:தேங்காய் எண்ணெயில் செம்பருத்தி பூவை நன்றாக காய வைத்து போட்டு அதனுடன் துளசி விதை மற்றும் வெட்டிவேர் இரண்டையும் சேர்த்து போட்டு நன்றாக காய்ச்சி தலைக்கு தேய்த்து வந்தால் பொடுகு குறையும்.

அடர்த்தியாக வளர:பாதாமில் புரதம் இருப்பதால் அவை கூந்தலின் வளர்ச்சியை தூண்டும். அதோடு எலுமிச்சை சாறும் கலந்து பயன்படுத்துவதால் முடி அடர்த்தியாக வளரும்.

தேவையான பொருட்கள் :

பாதாம் பருப்பு.

எலுமிச்சைச்சாறு.

செய்முறை:10 பாதாம் பருப்பை எடுத்து 3 ஸ்பூன் எலுமிச்சைச்சாறு விட்டு நன்றாக அரைத்துக் கொள்லுங்கள். இதனை தலையில் தேய்த்து அரை மணி நேரம் ஊற வைத்து பிறகு குளித்து வந்தால் முடி அடர்த்தியாகவும் கருமையாகவும் வளரும்.

பொடுகுத் தொல்லைக்கு :படிகாரம் சருமம் மற்றும் கூந்தலுக்கு நல்லது. கிருமிகளால் உருவாகும் சரும பற்றும் கூந்தல் பாதிப்பௌ குணப்படுத்தும். பூஞ்சைத் தோற்று மற்றும் பொடுகை முழுக்க கட்டுப்படுத்தும்.

தேவையான பொருட்கள்:

படிகாரம்

சீயக்காய்

செய்முறை:படிகாரத்தை 20 கிராம் எடுத்துப் பொடியாக்கி தண்ணீரில் கரைத்து தலையில் தேய்த்து ஒன்று அல்லது 2 மணி நேரம் சென்றபின் சீயக்காய் தேய்த்துக் குளித்து வந்தால் பொடுகுத் தொல்லை வராது

முடி நன்றாக செழித்து வளர :பூசணி கொடியி்ன் கொழுந்து இலைகளை எடுத்து நன்கு கசக்கி சாறு பிழிந்து அந்த சாற்றை முடி உதிர்ந்த இடத்தில் தடவி வந்தால் முடி வளரும். வாரம் இருமுறை செய்தால் அதன் பலன் இரட்டிப்பாகும்.

முடி உதிர்தல் நிற்க :முடி உதிர்வதை தடுக்க தேங்காய் பால் உதவுகிறது. கூந்தலை ஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும் மாற்றும்.

தேவையான பொருட்கள்:

வெந்தயம்.

தேங்காய்ப் பால்.

செய்முறை:வெந்தயத்தை எடுத்து தேங்காய் பாலில் நன்றாக ஊறவைக்க வேண்டும். பின்பு நன்றாக விழுதுப் போல் அரைத்து தலைக்குத் தேய்த்து குளித்து வந்தால் தலைமுடி உதிர்தல் குறையும்.

கருமையாக முடி வளர :மாசிக்காய் எல்லா நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும். இதனை வாங்கி வாரம் 2 நாட்கள் பயன்படுத்துங்கள். பக்க விளைவுகளில்லாதது.

தேவையான பொருட்கள்:

மாசிக்காய்

பால்

செய்முறை:மாசிக்காயை எடுத்து பொடி செய்து அந்த தூளை தண்ணீர் அல்லது பாலில் குழைத்து தலை முடியில் தடவி ஊற வைத்துக் குளித்து வந்தால் தலை முடி கருமையாக மாறும்.

அடர்த்தியாக வளர

தேவையான பொருட்கள்:

கறிவேப்பிலை.

தயிர்.

செய்முறை:கறிவேப்பிலையை அரைத்து தயிருடன் அரைத்து தலையில் தடவி அரை மணி நேரம் குளிக்கவும். இவ்வாறி வாரம் இருமுறை செய்தால் முடி நல்ல அடர்த்தியாக வளர ஆரம்பிக்கும்.

வாரம் ஒரு நாள் :மிளகிலேயே வால் மிளகு என்று கிடைக்கும் அதனை வாங்கி பயன்படுத்தினால் பொடுகுத் தொல்லையே இருக்காது, சிலருக்கு வெள்ளை வெள்ளையாக செதில் போக் உதிரும். அதனையும் இந்த குறிப்பு போக்கிவிடும்.

தேவையான பொருட்கள்:

வால் மிளகு.

நல்லெண்ணெய்.

செய்முறை:வால் மிளகை, நல்லெண்ணெயில் காய்த்து வாரம் ஒரு முறை தலைக்கு தேய்த்து 1 மணி நேரம் ஊற வைத்து குளித்து வந்தால் பொடுகு நீங்கும்.

கூந்தல் நீண்டு வளர:சப்பாத்திக் கள்ளி விஷம் என்று சொன்னாஅலும் அது விஷத்தை முறிக்கவும் பயன்படுகிறது. சப்பாத்திக் கள்ளி மருத்துவம் குணம் நிறைந்தவை. அதன் பூக்கள் கூந்தல் வளர்ச்சிக்கு பயன்படுகிறது.

தேவையான பொருட்கள்:

சப்பாத்திக் கள்ளி பூக்கள்

தேங்காய் எண்ணெய்.

செய்முறை:சப்பாத்திக் கள்ளியின் சிவந்த பூக்களில் சாறு எடுத்துக் கொள்ளுங்கள். தேங்காய் எண்ணெயில் அந்த சாறை கலந்து எண்ணெயை காய்ச்ச வேண்டும். இதனை தலையில் தேய்த்து வர கூந்தல் அடர்த்தியாக வளரும்.

வெங்காயம் :வெங்காயம் சொட்டை விழுந்த இடத்தில் முடியை வளரச் செய்யும் . இது நிறைய பேருக்கு பலனைத் தந்திருக்கிறது.

தேவையானவை :

வெங்காயம்.

செம்பருத்திப்பூ

செய்முறை:வெங்காயம், செம்பருத்தி பூவுடன் சேர்த்து அரைத்து வழுக்கை மீது தடவி வர வழுக்கையில் முடி வளர ஆரம்பிக்கும்.

மரிக்கொழுந்து :மரிக்கொழுந்து இலையை புதிதாக பறித்து அரைத்து தலையில் தடவி 20 நிமிடங்கள் கழித்து தலைக்கு குளிக்க வேண்டும். இப்படி வாரம் ஒரு நாள்: செய்து வந்தால் நாளடைவில் முடி கருமையாக மாறும்.

பொடுகு மறைய :வேப்பம் பூ பொடுகு, பேனை விரட்டும். அது கிருமிகளையும் அழிக்கும். சருமத்திற்கும் பயன்படுத்தலாம். கூந்தல் வளர்ச்சிக்கும் பயன்படுத்தலாம்.

செய்முறை:வேப்பம் பூவுடன் வெல்லத்தையும் கலந்து காய்ச்சி தலையில் தேய்த்து குளித்தால் வர பொடுகு நீங்கும்


Wednesday, 27 November 2019

இன்னும் சற்று நேரத்தில் விண்ணில் பாயவுள்ளது பிஎஸ்எல்வி சி47 !ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இன்று காலை 9.28 மணிக்கு பிஎஸ்எல்வி சி47 ராக்கெட் மூலம் இந்தியாவின் ‘கார்டோசாட் 3’ செயற்கைக்கோள் மற்றும் அமெரிக்காவின் 13 நானோ வகை செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்பட உள்ளன. இதற்கான கவுண்ட்டவுன் நேற்று காலை 7.28 மணிக்கு தொடங்கியதாக இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

1,625 கிலோ எடை கொண்ட இந்த மூன்றாம் தலைமுறை அதிநவீன கார்டோசாட்-3 செயற்கைக்கோள், புவியிலிருந்து 509 கி.மீ. தொலைவிலான சுற்றுவட்டப் பாதையில் 97.5 கோணத்தில் நிலைநிறுத்தப்பட உள்ளது. அங்கிருந்தபடி, புவியைக் கண்காணிப்பதுடன் உயா் தரத்திலான புகைப்படத்தை எடுத்தனுப்பும் திறன் கொண்டதாகும்.

குறிப்பாக வானில் மேகக்கூட்டங்களை ஊடுருவி புவியை தெளிவாகப் படம் பிடிக்கும் என்பதோடு, இரவு நேரத்திலும் புவியை மிகத் தெளிவாகப் படம்பிடித்து அனுப்பும் திறன் கொண்டது இந்த செயற்கைக்கோள். இது 5 ஆண்டுகள் செயல்பாட்டில் இருக்கும் எனவும் இஸ்ரோ சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கார்டோசாட்-3 செயற்கைக்கோளுடன் அமெரிக்காவுக்குச் சொந்தமான 13 சிறிய ரக செயற்கைக்கோள்களும் விண்ணில் ஏவப்பட உள்ளன. இந்த 14 செயற்கைக்கோள்களும் பி.எஸ்.எல்.வி. சி-47 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட உள்ளன. இது இஸ்ரோ விண்ணில் ஏவும் 49-ஆவது பி.எஸ்.எல்.வி. ராக்கெட் என்பதோடு, திறன் கூட்டப்பட்ட 21-ஆவது எக்ஸெல் ரக ராக்கெட் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Sunday, 24 November 2019

சூரியகிரகணம்: திருப்பதியில் 13 மணி நேர நடை அடைப்பு*:திருப்பதி ஏழுமலையான் கோயிலில் டிச.25 மற்றும் டிச.26 தேதிகளில் 13 மணி நேரம் கோயில் நடை அடைக்கப்படும் என்று தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது.

சூரிய கிரகணத்தை ஒட்டி டிச.25 மற்றும் டிச.26 தேதிகளில் 13 மணி நேரம் கோயில் நடை அடைக்கப்படும் என்று திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Saturday, 23 November 2019

மனஅழுத்தத்தைக் குறைக்க பெண்கள் சூட வேண்டிய பூக்கள் என்ன தெரியுமா?தமிழக பெண்கள் பொதுவாக பூக்களை தலையில் சூடுவது வழக்கம். இது நமது கலாச்சாரத்தில் தொன்று தொட்டு வரும் ஒரு வழக்கம். நம் முன்னோர்களில் ஒவ்வொரு செயலிற்கு பின்பும் பல அறிவியல் உண்மைகள் ஒளிந்திருப்பது போல் பெண்களை பூச்சூட சொன்னதற்கு பின்பும் அறிவியல் ஒளிந்துள்ளது.


உலகம் முழுவதும் 38 ஆயிரம் கோடிக்கு மேல் பூ வகைகள் உள்ளன. ஆனால் ஆயிரம் கோடிப் பூக்கள் மட்டுமே தற்போதைய நடைமுறையில் உள்ளன. அதிலும் 500 கோடி பூக்களே மருத்துவத்துக்குப் பயன்படுத்தப்படுகின்றன. பெரும்பாலான பூக்கள் மணமூட்டிகள் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகின்றன.


பூக்களைச் சூடுவதால் ஏற்படும் நன்மைகள்:

பூக்களில் உள்ள பிராண ஆற்றல், மூளைச் செல்களால் ஈர்க்கப்பட்டு, நாளமுள்ள மற்றும் நாளமில்லாச் சுரப்பிகளின் சீரான இயக்கத்துக்கு உதவுகிறது.

இந்தப் பிராண ஆற்றலானது மனஅழுத்தத்தைக் குறைத்து, மனஅமைதிக்கு உதவுகிறது.


தலையில் பூ வைப்பது, மனமாற்றத்துக்கு உதவுகிறது. ஒரு விஷயத்தைப் பல கோணங்களில் பார்க்கும் தன்மையைக் கொடுக்கிறது. அதோடு மகிழ்ச்சியை உண்டாக்குகிறது.

நம்மைச் சுற்றியுள்ளவற்றைக் கவனிக்கும் சக்தியை (observation) அதிகரிக்கச்செய்கிறது.

பூக்களைச் சூடும் முறை:

மணமுள்ள பூக்களை வாசனையில்லாதப் பூக்களுடன் சேர்த்துச் சூடக்கூடாது. அது கூந்தல் வளர்ச்சியைக் குறைக்கும்.

ஜாதி மல்லிகைப்பூ, செவ்வந்திப்பூ, குடசப்பாலைப்பூ, பாதிரிப்பூ, மகிழம்பூ, செண்பகப்பூ, சந்தனப்பூ, ரோஜாப்பூ போன்றவற்றைக் கனகாம்பரத்துடன் சேர்த்துச் சூடினால் மிகவும் நல்லது.
மந்தாரை, தாமரை, செவ்வரளி, கருங்குவளைப்பூ போன்றவற்றை கற்பூரத்துடன் சேர்த்துச் சூடினால் மனம் அமைதி பெற உதவும்.

மல்லிகைப்பூவை குளிப்பதற்கு முன் சூட வேண்டும்.

முல்லைப்பூ, வில்வப்பூவை குளித்த பின்பு சூடலாம்.

உடலில் எண்ணெய் தேய்க்கும்போது தாழம்பூ சூடலாம்

Wednesday, 20 November 2019

வீட்டில் குழந்தை பிறந்து எத்தனை நாள்கள் கழித்து சபரிமலைக்கு மாலை போடலாம்?*

குருசாமியைக் கேளுங்கள்...
கார்த்திகை மாதம் சிவனுக்குரியது. மாதங்களில் நான் கார்த்திகையாக இருக்கிறேன் என்கிறார் சிவபெருமான். மார்கழிமாதமோ பெருமாளுக்குரியது. ஹரனுக்கும் ஹரிக்கும் உகந்த இந்த இருமாதங்களிலும் ஹரிஹரபுத்திரனான ஐயப்பனை வழிபடுவது சிறப்புக்குரியது. ஐயப்பசாமிக்கு மாலையிட்டு விரதமிருந்து மலைக்குச் செல்லும்போது மேற்கொள்ள வேண்டிய சில நியமங்களை நம் பெரியவர்கள் ஏற்படுத்தியிருக்கிறார்கள். அவற்றையெல்லாம் புதிதாக மாலைபோட்டுக் கொள்பவர்களுக்குக் குருசாமிகள் சொல்லித்தருவர்.

யாரெல்லாம் மாலைபோடலாம்... மாலை போடக்கூடாது? மாலைபோட என்ன தகுதி? என்கிற அடிப்படையான கேள்விகள் சிலருக்கு உண்டு. அப்படிப்பட்ட கேள்விகளைக் கேட்குமாறு , 'குருசாமியிடம் கேளுங்கள்' பகுதியில் நம் வாசகர்களிடம் கேட்டிருந்தோம். வாசகர்களின் கேள்விகளுக்கு மூத்த குருசாமி அரவிந்த் ஸுப்ரமணியம் பதில் அளித்துவருகிறார்.

சுரேஷ் என்னும் வாசகர், மின்னஞ்சல் மூலம் ஒரு கேள்வியை எழுப்பியிருந்தார்.

"எனக்கு ஐயப்பன் அருளால் கடந்த அக்டோபர் 5-ம் தேதி மகன் பிறந்துள்ளார். நான் வருடா வருடம் கார்த்திகை முதல் நாள் மாலை போட்டு 48 நாள்கள் விரதமிருந்து மலைக்குச் செல்வேன். இந்த முறை ஐந்தாம் ஆண்டாக நான் மாலை போட்டுள்ளேன். சில பேர் குழந்தை பிறந்து மூன்று மாதம் முடியாமல் அதற்குள்ளாகவே மாலை போட்டுவிட்டாயே... என்கிறார்கள். இதில் ஏதும் தீட்டு இருக்கிறதா? கொஞ்சம் விளக்கவும்" என்று கேட்டிருக்கிறார்.

இந்தக் கேள்வியை குருசாமி அரவிந்த் ஸுப்ரமணியம் அவர்களிடம் கேட்டோம்.

"பொதுவாகக் குழந்தை பிறந்த தீட்டை 'விருத்தித் தீட்டு' என்று சொல்லுவோம். இந்தப் பக்தருக்குக் கடந்த அக்டோபர் 5-ம் தேதி குழந்தை பிறந்திருக்கிறது. பொதுவாகக் குழந்தை பிறந்த தீட்டுக் கணக்கு குடும்பத்துக்குக் குடும்பம் மாறக்கூடியது. அதிகபட்சமாக 10 நாள்களில் இருந்து 16 நாள்கள் வரை இருக்கும். தீட்டு முடிந்துதான் புண்ணியாக வாசனம் செய்து பெயர் இடுவது வழக்கம். அதைச் செய்துவிட்டாலே தீட்டு எல்லாம் முடிந்துவிட்டது என்று பொருள். மூன்று மாதமெல்லாம் தீட்டு என்று எந்தக் கணக்குமில்லை.

மனைவி கருவுற்று 5 மாதங்களுக்கு மேல் ஆகியிருந்தால் குழந்தை பிறந்து பெயர் வைக்கும்வரை மலைக்குப் போகக்கூடாது என்பதுதான் விதி. இவருக்குக் குழந்தை பிறந்து ஒரு மாதத்துக்குமேல் ஆகிவிட்டதால் இவர் சபரிமலை போவதில் எந்தத் தடையும் இல்லை. எனவே, இவர் தாராளமாக மலைக்குச் செல்லலாம். ஐயப்பன் அருள் அனைவருக்கும் எப்போதும் உண்டு" என்று பதில் சொல்லியிருக்கிறார்.

இதுபோன்ற சந்தேகங்கள் உங்களுக்கும் இருந்தால், கீழே உள்ள படிவத்தில் கேளுங்கள். ஆன்மிகப் பெரியவர்களிடம் கேட்டு உங்களுக்கான பதிலை பெற்றுத்தருகிறோம்.